சுபமங்களா தொடங்கி வைத்த மரபை நான் பின் தொடர்ந்தேன்! - புதுவை இளவேனில்
எப்போதும் ஆவணம் என்பது அன்றே தெரியாது. காலம் கடந்துதான் தெரியும்.
அண்மையில் தமிழின் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது படைப்புகளுக்கான உரிமையைப் புகைப்பட கலைஞரும் ஆவணப்பட இயக்குநருமான புதுவை இளவேனில் மற்றும் தனது இரு மகன்களுக்கு எழுதி வைத்தார். அதனையொட்டி புதுவை இளவேனிலுடன் ஏசியாவில் தமிழுக்காக வித்யா செந்தமிழ்செல்வன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு பகுதி.
ஒரு எழுத்தாளருக்குப் புகைப்படம் என்பது எவ்வளவு முக்கியமான விஷயம்?
ரொம்ப முக்கியம். பாண்டிச்சேரி ரோமன் ரோலைன் என்கிற முக்கியமான நூலகம் இருக்கிறது. அங்கு முக்கியமான நல்ல புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அந்தப் புத்தகங்களில் வெளிநாட்டு எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் நம்முடைய ஊர் எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கும்போது ஒரு சின்ன பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்தான் இருக்கிறது. எழுத்தாளர் ப. சிங்காரத்திற்கு இப்போதுவரை புகைப்படம் கிடையாது. ஒரே ஒரு புகைப்படம்தான் இருக்கிறது. எனக்கு ஒரு 18 வயது இருக்கும்போது ஏன் நம் ஊரில் மட்டும் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது. அப்போதுதான் சுபமங்களா பத்திரிக்கையைப் பார்க்கிறேன். தற்போது சினிமா ஒளிப்பதிவாளராக இருக்கும் வைல்டு ஆங்கிள் ரவிசங்கர் பத்திரிகை ஒளிபடக் கலைஞராக இருந்தார். அவர் எடுத்த புகைப்படங்களை சுப மங்களாவில் பார்த்தேன். புதியதாக இருந்தது. அந்த ஸ்டைல் எனக்கு பிடித்தது. அதை நான் பின்தொடர்ந்தேன். அதற்கு முக்கியமாக நிறைய நண்பர்கள் உதவி செய்தனர். அந்த பாஸ்போட் சைஸ் போட்டோ விசயம் என்னால் தகர்தெறியப்பட்டது. நான் அதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். என்னிடம் 100க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் புகைப்படம் இருக்கிறது.

இது டிஜிட்டல் உலகம் என்பதால் பல எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் ஜி. நாகராஜன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒன்றோ இரண்டோ புகைப்படங்கள் தான் இருக்கிறது. இதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
இதுபற்றி ரொம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். 'உங்களை புகைப்படம்லாம் எடுக்கமாட்டாங்களா?' என ஒரு நாள் கிராவை கேட்டேன். அப்போது அவர் புகைப்படம் பற்றிய ஒரு ஆவணத்தை அவர் எனக்கு கொடுத்தார். அவரின் ஊரில் தலையில் கேமராவை எடுத்துக்கொண்டு வந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்போது மொபைல் போட்டோகிராபி என்று சொல்லக்கூடிய ஒன்று அப்போதே இருந்திருக்கிறது. கிராவும் அவரது பாட்டியும் எடுத்த புகைப்படத்தை கிரா என்னிடம் காட்டியிருக்கிறார். வெயிலில்தான் அப்போது புகைப்படம் எடுக்கமுடியும்.
மேலும், போட்டோ என்பது காஸ்ட்லியான விசயமாக ஆகிவிட்டது. போட்டோவைக் காட்டிதான் ஒரு மொபைல்போன் கூட விற்பனை செய்யப்படுகிறது. போட்டோ மேல் எல்லா காலக்கட்டதிலும் ஒரு கிரேஸ் உண்டு. அந்த புதுமைப்பித்தனை போட்டாவாவது எடுத்திருக்கிறார்களே என்று எனக்கு சந்தோசமாக இருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் ச. கந்தசாமியை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியில் அவர் என் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிறார். நான் அவரிடம் சார் வணக்கம் சார் என்றேன். அவர் வணக்கம் தம்பி என்றார். நான் திரும்பவும் வணக்கம் சார். என்கிறேன். அவர் வணக்கம் தம்பி என்கிறார். சார் வணக்கம் சார் நான் இளவேனில் என்று சொல்லி தொந்தரவு செய்கிறேன். அவரும் வணக்கம் என்கிறார். என்னடா இவர் நம்மை புறக்கணிக்கிறாரா? என்று யோசித்தேன். சார் போட்டோலாம் எடுப்பேன் ல அந்த இளவேனில் சார் என்றேன். அதற்குப் பிறகு அவர் எழுந்த வேகம் இருக்கிறது இல்லையா? அது வேற லெவல்.
அய்யோ தம்பி சாரி டா சாரி டா. நான் உன்கிட்ட போட்டா எடுத்துகனும் டா என்று சொல்லி அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்து ஒரு இரண்டறை மணி நேரம் சூரியன் மறைய மறைய நான் அவரை போட்டோ எடுத்தேன். சமீபத்தில் அவரது மறைவு செய்திக்குப் பிறகு அதிகமாகப் பகிரப்பட்டது அவரை நான் எடுத்த சில போட்டோதான். என்னை யாருக்கும் நான் காட்டிக் கொள்ள மாட்டேன். நீங்கள் எடுக்கும் இந்த மாதிரியான இண்டர்வியூ கூட ஒரு காலத்தில் வேண்டாம் என்று நினைத்தது உண்டு. அதுமாதிரி முகங்கள் தெரிய ஆரம்பித்தால் அதன் சந்தோஷம் போய்விடும். என்னைபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். எப்போதும் ஆவணம் என்பது அன்றே தெரியாது. காலம் கடந்துதான் தெரியும். நான் சுந்தர ராமசாமியை எடுத்த போட்டோ பெரிய அளவில் பேசப்படும் என்று எனக்கு தெரியாது. கிராவை எடுக்கும்போது தெரியாது. பிரபஞ்சனை எடுக்கும்போது தெரியாது. எடுத்த பிறகு காலம் கடந்துதான் நிற்கும். அதன் பெயர் தான் ஆவணம்.

சுந்தர ராமசாமி பயங்கர இண்டலக்சுவல். ஆனால் நான் பழகிய பத்து நாட்களில் அவர் குழந்தை. எனக்கு அது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவரை எழுத்துடன் மட்டுமே நிறுத்தமுடியாது. அவருடன் பழகும்போதுதான் தெரியும் அவர் ஆளுமையான குழந்தை. சார் உட்காருங்க அப்படி என்று சொன்னால் உட்காருவார். சிரிங்க என்றால் சிரிப்பார். அவரை சந்திக்கும் முன்னர் ஒரு பயம் இருந்தது. ஆனால் அதே சுந்தர ராமசாமியை இன்று நான் போட்டோ எடுத்தால் அந்த மாதிரி நடப்பேனா என்றால் அது முடியாது. அப்போது நான் சிறு பிள்ளை. இப்போது நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன். இப்போது நான் பக்குவம் அடைந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த பக்குவத்தை விடவேண்டும். போட்டோ கிராபரிடம் பக்குவம் வந்துவிட்டால் அது எடுபடாது. என்னுடைய அனுபவம் அப்படி. நான் ரொம்ப சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டேன். சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதனால் மட்டுமே எனக்கு போட்டோஸ் கிடைத்தது. இல்லை என்றால் நிச்சயமாக கிடைத்திருக்காது. மிக அற்புதமான படைப்பாளி சுந்தர ராமி. இன்னும் சொல்லப்போனால் என்னை அடையாளப் படுத்தியது அவர்தான். அதற்கு முன்னர் எடுத்தப் படங்களை விட நான் சு.ராவை எடுத்த பிறகுதான் இளவேனிலாக அறியப்பட்டேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம்.

Related Stories
டிஎம் கிருஷ்ணாவுக்குத் திறந்திருக்கும் பல கதவுகள்!
சென்சார் போர்டிலும் மனு இருக்கிறது!
ரகசியம்தான் இருந்தாலும் பரவாயில்லை சொல்லிடுறேன்! - புதுவை இளவேனில்