பறவை காய்ச்சல் பரவலும், இறைச்சி வியாபாரமும்! கள நிலவரம்?
1996-ம் ஆண்டு பறவை காய்ச்சல் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளுவன்சா வைரஸ் என்று அழைக்கப்படும் H5N1 என்ற வைரஸ் மூலம் இந்நோய் பரவுகிறது.
கரோனா தொற்றின் அச்சுறுத்தல் குறையாத சூழலில், பறவை காய்ச்சலின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. கேரளா, அரியானா, மத்தியபிரதேசம், பஞ்சாப், இமாச்சல்பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தானில் ஏராளமான காகங்கள் உயிரிழந்தன. இவற்றுக்குப் பறவைக் காய்ச்சல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அரியானாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் கோழிகளைக் கொல்ல அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துக் காணப்படுவதால், அம்மாநிலத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து அங்கும் பறவை காய்ச்சல் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் எல்லையோர மாநிலமான கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும் பறவைகள் தொடர்பான பொருட்களைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட வியாபாரி ஒருவர் குறிப்பிடுகையில், எல்லைகள் மூடி மருந்துகள் அடிக்கப்பட்டாலும், சில குறுகிய சாலைகள் வழியாகக் கோழிகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர். ஒரு சாலையை மட்டும் மூடுவதால் எந்த பயனும் இல்லை என்றார்.
பறவை காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட இடம்.
1996-ம் ஆண்டு பறவை காய்ச்சல் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஏவியன் இன்ஃப்ளுவன்சா வைரஸ் என்று அழைக்கப்படும் H5N1 என்ற வைரஸ் மூலம் இந்நோய் பரவுகிறது. இந்த வைரசும் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. முதலில் வாத்துகளிடம் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று அடுத்தடுத்து மற்ற பறவைகளிடமும் பரவியது.
1997 ஹாங்காங் பறவை சந்தையிலிருந்து மனிதர்களிடம் இந்த வைரஸ் பரவியது ஆய்வின் மூலம் தெரியவந்தது. 18 பேருக்குத் தொற்று ஏற்பட்ட நிலையில் அதில் 6 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதில்லை. பறவைகளின் கழிவுகள், மற்றும் மூக்கு, வாய் பகுதிகளிலிருந்து வெளியேறும் திரவம் மூலம் எளிதில் பரவுகிறது.
கோழிகளைத் தவிர பன்றிகள், பூனைகள், நாய்கள், குதிரைகள், காகங்கள் ஆகியவற்றையும் இந்த வைரஸ் தாக்குகிறது.
ஏவியன் இன்ஃப்ளுவன்சா வைரசால் பாதித்த பண்ணையில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, வான்கோழி, புறா, ஈமு கோழி போன்ற பறவைகளைக் கையாளும்போதோ அல்லது இந்த வைரசால் பாதித்து இறந்த பறவைகளைக் கையாளுவதன் மூலமோ இந்நோய்த் தொற்று மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பறவைகளைக் கொல்வது பரவலைக் கட்டுப்படுத்தும் என்பது பொதுவான நடவடிக்கையாகவே கருதப்பட்டாலும், அது நிரந்தர தீர்வாகாது.

மனிதர்களைப் பாதிக்கும் பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் என்பது 1997லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டில் ஆசியாவில் இந்நோய் பரவுவது கண்டறியப்பட்டது. அவ்வாறு தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், கண் அழற்சி போன்ற பாதிப்புகள் தென்படும். இதில் கடுமையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சல், சுவாச அழுத்தம், உடலின் பல பாகங்கள் செயலிழப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த அறிகுறிகள் தென்படும் நபர் 48 மணி நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாமல் இருக்கப் பாதிக்கப்பட்ட பறவை அல்லது கோழியுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது சிறந்த வழியாகும். திறந்தவெளி சந்தைகள், கோழி வளர்க்கப்படும் இடங்களில் PPE உடை அணிந்து வேலைகளை மேற்கொள்ளலாம். கோழி இறைச்சிகளை வெட்டும் போது கைகளில் உறை அணிந்துகொண்டு பணி செய்யலாம். அதேபோல் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தல் மிகவும் அவசியம்.

மத்திய அமைச்சரவையின் அறிவுறுத்தல்கள்
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் “இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து உண்டால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. கோழி மற்றும் முட்டையின் விற்பனையை மாநிலம் முழுவதும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுடனான இயக்கம் பற்றி மாநில எல்லையில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு, கிருமி நீக்கம் செய்தல், இறந்த பறவைகளை முறையாக அப்புறப்படுத்தல் ஆகியவை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்லையோர மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
எல்லையோர மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லைகளில் பாதுகாப்புப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, எல்லைப் பகுதிகளில் உள்ளே வரும் வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக 4பேர் கொண்ட மருத்துவக் குழு 24 மணி நேரத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லையில் வரும் வாகனங்களில் மருந்து அடிக்கப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்களே புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலை
பறவை காய்ச்சல் எதிரொலியால், எல்லையோர மாவட்டங்களில் கோழி இறைச்சியின் விலை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களின் விலை நிலவரம், ஊரம்பு பகுதி (சாலையின் ஒரு பக்கம் கேரள, மறுபக்கம் தமிழ்நாடு. கேரளா தமிழ்நாடு பிரியும் பகுதி) இறைச்சி 09.01.2021 அன்று 95 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு முந்தைய நாளான 08.01.2021 அன்று விலை 105க்கு விற்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 120 ரூபாய்க்குக் கோழி இறைச்சி விற்கப்பட்டுள்ளது.
ஊரம்பு பகுதியைச் சேர்ந்த ஷிகாபுதின் என்ற கோழி இறைச்சி வெட்டும் தொழிலாளி, “இங்கு இறைச்சிகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், விலை குறைந்துகொண்டே செல்கிறது. விலை குறையக் குறைய வியாபாரம் அதிகரிக்கும். இந்த பகுதியில் தமிழகம் மற்றும் கேரளா இரண்டு பகுதியிலிருந்தும் இறைச்சி வாங்க மக்கள் வருவர்” என்றார்.

கேரள எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட மஞ்சாலுமூடூ பகுதியில் 09.01.2021அன்று கோழி இறைச்சி ரூ.102க்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோல், அதற்கு முந்தைய நாட்களில் விலையைவிட வேகமாக விலை குறைந்து வருவதாக அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்தடுத்த நாட்களில் விலை இன்னும் வீழ்ச்சியடையும். இந்த பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து தான் கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு இருப்பதால் வியாபாரம் குறைந்து வருகிறது என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்ற சில கடைகளில், கோழியிறைச்சியின் விலை வீழ்ச்சியடைந்தாலும், வாங்கும் மக்கள் சாதாரணமாகவே இருக்கின்றனர். விலை குறையக் குறைய மக்களிடையே வாங்கும் ஆர்வம் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டனர்.
நாமக்கல்லில் கோழி விலை
நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருதினங்களுக்கு முன்பு கறிக்கோழி விலை குறைந்து 78 ரூபாயாக விற்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ 92 ரூபாய்க்கும், முட்டைக்கோழி 52 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது. கேரளாவிற்குக் கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் முட்டை விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
மருத்துவர் சந்திரசேகர்
“பறவை காய்ச்சல் கேரளா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய பகுதிகளில் வாத்துகளிடையே மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. வாத்துகளிலிருந்து கோழிகளுக்குக் கூட இது பரவவில்லை. டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட நிலையில், அது ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் அடுத்த மாநிலமான தமிழகத்தில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பறவைகள் பாதுகாப்பு இடங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு இடங்களில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், உதகமண்டலம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லையோர பகுதிகளில் 24 மணிநேர பாதுகாப்புப் பணிக்காகக் கால்நடை பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் எல்லையோரத்தில் கொண்டுவரப்படும் கோழிமுட்டைகள், உணவுகள் போன்றவை சோதனை செய்து திரும்ப அனுப்புகின்றனர். இங்கிருந்து பிராய்லர் கோழி முட்டைகளைக் கொண்டு இறக்கிவிட்டுத் திரும்ப வரும் வாகனங்களை குளோரின் டை ஆக்ஸைட் கலந்த மருந்து தெளித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றோம். கால்நடை தொடர்பான பராமரிப்பு இடங்களில் இறப்பு மற்றும் நோய்ப் பாதிப்பு தொடர்பான தகவல்களைக் கண்காணித்து வருகிறோம்.

கேரளாவில் வாத்துகளிலேயே இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே முட்டை மற்றும் இறைச்சிகள் உண்பது பற்றி தமிழகத்தில் எந்த வித அச்சமும் தேவையில்லை. நன்கு வேக வைத்து உண்பது எப்போதும் சிறந்தது. முட்டைகள் பாதி அளவில் வேக வைத்து உண்பதை விட முழுவதும் வேக வைத்து உண்ண வேண்டும். இறைச்சிகளை உண்ண வேண்டாம் என்று பரவும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே. இது இறைச்சி கோழிகளை விற்கும் தொழிலாளிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைகிறது.
ஒரு நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடே காரணம். இறைச்சி மற்றும் முட்டை தவிர்க்கப்பட்டால் பலருக்கு போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் கிடைக்காமல் போகும். எனவே அவற்றைத் தவிர்க்காமல் இருப்பது சிறந்தது.” என்றார்.
