சல்மான் கானுக்கு பிடித்த விஜய் படம்?- `தபாங் 3’ டிரைலர் வெளியீட்டில் சுவாரசியம்!
``பிரபுதேவா உங்க ஊரில் இருந்து வந்தாலும் அவர் எங்களோட சொத்து. பாகுபலி, கேஜிஎப் இந்தியில் நல்ல வசூல் பண்ணுச்சு. அதேமாதிரி, தபாங்கை உங்க ஊர்ல ஹிட் ஆக்குங்க”
இந்தியா முழுவதும் ரசிகர்களால் 'சல்லுபாய்' என்று செல்லமாக அழைக்கப்படும் சல்மான்கான் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தபாங் 3'. இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மும்பையில் இருந்தே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் செய்தியாளர்களிடம் `தபாங் 3' டீம் கலந்துரையாடினார்கள்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் சல்மான்கான், "தபாங் 3 முழுக்க முழுக்க ரசிகர்ளுக்கான படம். தென்னிந்தியாவில் இருந்து சுதிப் நடிச்சிருக்கார். உங்க ஊரு பிரபுதேவாதான் இயக்கியிருக்கார். தமிழ்ல டப் ஆகி வருது, தியேட்டர்ல மிஸ் பண்ணாம பாருங்க. தபாங் சீரிஸ்கென்று இருக்கும் மரியாதையை மனதில் வைத்து படம் எடுத்திருக்கிறோம். முந்தைய படங்களைத் தாண்டி நல்லாவே பண்ணிருக்கோம்.
நிறைய நண்பர்கள் பாலிவுட்டிலிருந்து தமிழில் படங்கள் ரீமேக் செய்கிறார்களே? தமிழ் படங்களை இந்திக்கு ரீமேக் செய்யும் எண்ணம் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் விஜய், அஜீத்தில் இருந்து தனுஷ், ரஜினி என அனைவரின் படங்களையும் முடிந்தளவு பார்த்து விடுவேன். அவர்களின் நடிப்பில் உருவாகும் படங்களில் சில படங்களைத்தான் ரீமேக் செய்ய முடியும். போக்கிரி படம் தென்னிந்தியாவை தாண்டி யாருமே பார்க்காததால் இந்தியில் ரீமேக் செய்தோம். விஜய் நடித்த தெறி, திருப்பாச்சி படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த படங்கள் பிடிக்கும். பிரபுதேவா உங்க ஊரில் இருந்து வந்தாலும் அவர் எங்களோட சொத்து. பாகுபலி, கேஜிஎப் இந்தியில் நல்ல வசூல் பண்ணுச்சு. அதேமாதிரி, தபாங்கை உங்க ஊர்ல ஹிட் ஆக்குங்க" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பிரபுதேவா, "தபாங் சீரிஸ் ரொம்ப வெற்றிகரமான சீரிஸ். அந்த சீரிஸில் இருந்து ஒரு படம் வரும்போது எதிர்பார்ப்புகள் அதிகமாகத்தான் இருக்கும். அதை மனதில் வைத்துதான் வேலை செஞ்சிருக்கேன்" என்று சுருக்கமாக தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
'தபாங் 3' படம் மூலம் அறிமுகமாகியிருக்கும் நடிகை சாயி மஞ்சிரேக்கரிடம், 'நீங்கள் படத்தில் அதிகமாக எத்தனை டேக் வாங்குனீர்கள்?' என்று பத்திரிக்கையாளர் கேட்க, அவர் சொல்வதற்கு முன்பு சல்மான்கான் மைக் வாங்கி, "அவங்க, ஒன்டேக் ஆர்டிஸ்ட்ங்க" என்று கலாய்த்தார்.