"வெற்றியைத் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை" - அசுரன் தனுஷ்!
அசுரனின் வெற்றி தனியாக யாருக்கும் சொந்தம் கிடையாது. இது அனைவருக்கும் சொந்தமானது.
இயக்குநர் வெற்றுமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் நடித்த அசுரன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் தனுஷ் பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு கொடுத்த சுதந்திரத்திற்கு அதற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தில் 25 சதவிகிதம் வெற்றியை இசைக்கு வழங்கலாம். வா அசுரா வா சிங்கிள் டிராக் இசைக்கோர்வை மிக அற்புதமாக இருந்தது. சண்டைக் காட்சிகளை நேர்த்தியான வடிவமைப்பு செய்து கொடுத்த மாஸ்டருக்கும் நன்றி. அது ஒரு கனா காலம் படத்தில் நடித்தபோது நான் சின்னப்பையன் அப்போது, ஒரு காட்சியை வெற்றிமாறன் நடித்துக் காட்டினார். அப்போதே இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அவரது பாணியை பின்பற்றி நடிக்காமல் எனக்கு வந்ததை அந்தக் காட்சியில் நடித்தேன். யார் நடித்தது நன்றாக இருந்தது என பாலுமகேந்திராவிடம் கேட்டேன். என் இரு மகன்களில் யாரைச் சொல்வது எனக் கேட்டுவிட்டு, பதில் சொல்ல மறுத்துவிட்டார். இருவரையும் அவர் மகனாகக் கருதினார். அன்று முதல் இன்று வரை நானும் வெற்றியும் சகோதரர்களாக இருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் ஒருவர் வெற்றிமாறன். சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு தனி நன்றி. அசுரன் படம் வெளியான நாளில் நான் லண்டனில் இருந்தேன். எனது அம்மா போனில் பேசினார். படம் நல்லா வந்திருக்கு என்று பாராட்டினார். அப்போது, வெற்றி வரும்போது நீ தூரமாக இருக்கிறாயே என்றார். இல்லை வெற்றி நமது பக்கத்தில்தான் இருக்கு என வெற்றிமாறனைத்தான் குறிப்பிட்டேன். வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்ள கூடாது. கடவுளுக்குத் தெரியும். அதனால்தான் என்னை தூரத்தில் வைத்து இருக்கிறார் என அம்மாவிடம் கூறினேன். அசுரனின் வெற்றி தனியாக யாருக்கும் சொந்தம் கிடையாது. இது அனைவருக்கும் சொந்தமானது. இதுபோன்ற படங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கைதி படமும் வெற்றி பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என பேசினார் தனுஷ்.
