முதுகுவலி பிரச்னையா? - இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
உடல் எடை அதிகமாக இருப்பது கூட முதுகுவலிக்கு காரணமாக இருக்கலாம். உடல் எடையை சரியான அளவு வைத்துக்கொள்ள வேண்டும்.
சமீப காலமாக இளம் வயதினர் பலரும் முதுகுவலி தொந்தரவால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு வாழ்வியல் மாற்றம்தான் முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, அதிக நேரம் கண்விழித்து டிவி பார்ப்பது போன்ற செயல்களால் முதுகு பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதுதான் பிரதான பிரச்னை. ஒருசிலருக்கு முதுகுவலி ஏற்பட்டால் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டால்தான் குணமாகும். ஆனால் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நாம் நம் உடல்நலனில் அக்கறை செலுத்தினால் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் முதுகுவலிக்கு குட்-பை சொல்லலாம்.
ஒரே இடத்தில் அமர்வதை தவிர்த்தல்
கணினி முன் நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்யும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆவது எழுந்து 5 நிமிடம் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கலாம், அலுவலகத்தின் உள்ளேயே சிறிது நடக்கலாம். ஒருசிலர் காலையில் இருக்கையில் அமர்ந்தால் மதியம் உணவிற்காக மட்டுமே எழுந்து கொள்வார்கள். அப்படி தொடர்ந்து அமர்வதால் உடல் உறுப்புகளும் பாதிப்படையும். சிலர் சிறுநீர் கழிக்க எழுந்து செல்ல வேண்டுமே என தண்ணீர் குடிக்காமல் கூட இருப்பார்கள். முடிந்தவரை சிறிய இடைவேளை எடுத்துக்கொள்வது நன்று. அதேபோல வீட்டில் டிவி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து நேரம் கழிப்பதும் தவறு. இது முதுகுவலியை மேலும் அதிகமாக்கும்.
உடற்பயிற்சி
தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முதுகுக்கு வலிமை தரும் யோகாசனங்களை செய்யலாம். வாக்கிங் கூட சிறந்ததுதான். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் வயிறு, முதுகு, கால்,கை பகுதிகள் வலுபெரும். அதுமட்டுமின்றி உடல் எடையும் குறையும். உடல் எடை கூட முதுகுவலிக்கு காரணமாக அமையலாம்.
சூடு மற்றும் ஐஸ் தெரபி
முதுகுவலி அதிகமாக இருக்கும் போது முதலில் ஐஸ் கட்டிகள் மூலம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வலி இருக்கும் போது சுடு நீரில் ஒத்தடம் கொடுக்க கூடாது. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வலி இருக்கும் பகுதியைச் சுற்றி மிகுந்த அழுத்தம் தராமல் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராவதுடன் தசை பிடிப்பும் குணமாகும். முதல் 2 நாட்கள் ஐஸ் கட்டிகள் மூலமும் அதன் பின்பு சுடு நீர் ஒத்தடமும் கொடுக்கலாம்.
சரியான தூக்கம்
தூங்கும் போது சரியாக நிலையில் படுக்க வேண்டும். நமக்கு வசதியாக இருக்கும் என்பதால் 2 தலையணை வைத்து தூங்குவது போன்றவற்றை எல்லாம் செய்யக்கூடாது. உண்மையில் தலையணை இல்லாமல் தூங்குவது தான் நல்லது. அதேபோல மெத்தை, தலையணை ஆகியவற்றை நல்ல தரத்தில் தேர்வு செய்து வாங்க வேண்டும். 7 ஆண்டுகளுக்கு மேல் மெத்தையை கட்டாயம் மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நிம்மதியாக தூங்க வேண்டும்.
பெண்களே ஹீல்ஸ் வேண்டாம்
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் முதுகுவலி பிரச்னை அதிகமாக இருக்கும். மகப்பேறுவிற்கு பின் ஏற்படும் உடல் மாற்றங்கள் காரணமாக முதுகுவலி வரும். சில பெண்கள் அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் காலணிகளை அணிவதால் முதுகுவலி மகப்பேறுவிற்கு முன்பே வந்துவிடுகிறது. முடிந்தவரை அதை தவிர்க்க வேண்டும். என்றாவது ஒருநாள் பயன்படுத்தலாம். ஹீல்ஸ் பயன்படுத்தினால் கீழ் முதுகு பாதிக்கப்பட்டு வலி ஏற்படும்.