முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் சர்க்கரை பாகு கலப்படம்! சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
மருத்துவ காரணத்துக்காக தேன் வாங்கி உட்கொள்ளும் நபர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சோதனையில் முன்னணி நிறுவனங்களின் தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேனின் தரத்தை கண்டறிய பல சோதனைகள் உள்ளன. அப்படி தான் சமீபத்தில் சில முன்னணி தேன் நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்ய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் முடிவெடுத்தது. அப்போது தான் பல நிறுவனங்களும் சர்க்கரை பாகை தேன் என கலப்படம் செய்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் மூலக்கூறு மட்டத்தின் ஒரு பொருளின் கலவையை அறிய என்.எம்.ஆர் சோதனை செய்யப்பட்டது. தேனை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இந்த சோதனையை செய்தாக வேண்டும். அந்த வகையில் டாபர், பைத்யநாத், பதஞ்சலி உள்ளிட்ட 13 முன்னணி நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட தேன் என்.எம்.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் பதஞ்சலி, டாபர் உள்ளிட்ட 10 நிறுவனங்களின் தேனில் கலப்படும் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த தேனில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை பாகுகள் கலக்கப்படுவதாக சிஎஸ்இ-யின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா தெரிவித்தார். அதே நேரம் சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேன் கலப்படமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணத்துக்காக தேன் வாங்கி உட்கொள்ளும் நபர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
