சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள 'குமரி தமிழ்'! உங்களுக்குத் தெரியாத வார்த்தைகளும் அதன் விளக்கமும்
பெரும்பாலான குமரி மக்கள் வெளியூர்களில் கன்னியாகுமரி மொழியைப் பேசினால் தவறாக நினைப்பர் என்று சிந்திக்கின்றனர்.
இந்தியாக்க கடைசில இருக்குறதாக்கும் எங்களுக்க எடம்... எங்களுக்க எடத்துத்துல சாப்பாடு எல்லாம் கேரளத்துல செய்யேது போலத்தான் செய்வோம். வீட்டுல நடக்கிய விஷேஷங்களையும் அங்குளது போலத்தான் இஞ்சயும் இருக்கும். இஞ்ச ரப்பர் பாலுவெட்ட போறவியளும், மீனுபிடிச்சப் போறவியளும்தான் நெறய உண்டு. எங்களுக்கு நீங்க மலையாளத்துல பேசினாலும், மனசிலாவும். ஒரு சமயம், கன்னியாயுமரி கேரளதுக்க கூடயாக்கும் இருந்திச்சு.
கேரளாவின் கட்டுப்பாட்டிலிருந்த குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, மற்றும் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை ஆகிய வட்டங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தன. அப்போதும் சாதி ரீதியிலான பிச்சனைகள் இப்பகுதிகளில் ஆட்டிப்படைத்தது.
கேரள உயர்குல மக்களுக்குக் குமரி மாவட்டத்தில் உள்ள நாடார், தலித் உள்ளிட்ட சாதியினர் அடிமைகளாக இருந்தனர். மன்னர் காலத்தில் சாதி அடிப்படையில் குமரி மக்களை மேலாடை அணிய அனுமதிக்கவில்லை. அந்த முறை மாற்றி அமைக்கப்பட்ட பின்னர், குமரி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தது.
எனவே கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்க வேண்டி, நேசமணி தலைமையில் தீவிர போராட்டம் நடத்தப்பட்டது. சிதம்பரநாதன் நாடார், ரசாக் எம்.பி., பி.எஸ்.மணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார் என, பலரும் குமரியின் விடுதலைக்காக போராடினர். இறுதியாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது
கன்னியாகுமரி பேச்சு மொழி
கன்னியாகுமரி கேரளாவிலிருந்து பிரிந்து தமிழகத்தில் இணைந்ததால், பேச்சு மொழி இன்றுவரை வேறுபடுகிறது. குமரி பேச்சு மொழிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக இந்த மொழி மலையாளம் கலந்த, தமிழ் என்றே கூறி வருகின்றனர். சிலர் இதை, இலங்கை தமிழ் என்றும் கூறுவதுண்டு. காரணம் மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பேசும் மொழியை விடக் கன்னியாகுமரியில் பேசப்படும் மொழி முற்றிலும் வேறுபட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஐந்திணைகள் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு நில அமைப்பு மற்றும் தொழில் சார்ந்து மக்களின் பேச்சு வழக்குகள் வேறுபடுகிறது. பொதுவாக தோவாளை, அகத்தீஸ்வரம் வட்டங்கள் ஒரே மாதிரியான பேச்சு வழக்கைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்குளம், விளவங்கோடு வட்டங்கள் ஒரே மாதிரியான பேச்சு வழக்கும், கடலோரம் சார்ந்த மக்கள் ஒரே விதமான பேச்சு வழக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களும் தங்களின் நில அமைப்பைப் பொறுத்தும், சாதி, சமயம் அடிப்படையிலும் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.
மலைகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் மொழி, மலைகளைச் சார்ந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.
குமரியில் பயன்படுத்தும் பெரும்பாலான வார்த்தைகள் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது என்று எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தின் வட்டார மொழியை தங்கள் எழுத்துகளில் பிரதிபலித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பேசப்படும் சில வார்த்தைகள்
அங்கோடி - அந்த வழியாக
அங்கணம் -உள்முற்றம்,
அடிச்சு மாற்றினான் - திருடிவிட்டான்
அண்டிப் பருப்பு - முந்திரி பருப்பு
அத்தாழை - அந்தி உணவு (இரவு உணவு)
அல்லாம - இல்லாமல்
அவிய, இவிய - அவர்கள், இவர்கள்
அற்றம் - கடைசி, இறுதி, முடிவு
அய்யாம் - கெட்டது
அறுக்கியான் - திட்டுகிறான்
அனக்கம் - சத்தம்
ஆக்கத்தி - சிறிய வகை அரிவாள்
ஆக்கர் கடை - காயலான் கடை
இங்கோடி- இந்த வழியாக
இங்கன - இங்கே
இஞ்ச -இங்கே
இரிங்க - அமருங்கள்
ஈக்கிலு -தென்னை ஓலையின் நடுநரம்பு
உச்சை - மதியம்
இத்திப்போல -மிகச்சிறிய அளவு
உழக்கு- மரக்கால்
உரியாடல - பேசுவதில்லை
எரப்பாளி - பிச்சை எடுக்கிறவன் என்று கேவலமாக பொருள்படும் சொல்
ஏம்பக்கம்- ஏப்பம்
ஒடக்கு - சண்டை, மனக்கசப்பு
ஒடுக்கம் - தாமதமாக ஒரு செயல் செய்ய பயன்படுத்துவது
கச்சவடம் - வியாபாரம்
கசேர - இருக்கை
கம்மு - பாக்கு மரம்
கட்டை- குட்டை
கடலாசு -காகிதம்
கடுவன் -ஆண் மிருகம்
கருக்கு- இளநீர்
காஞ்ச வெள்ளம்- வெந்நீர்
காத்தாடிக் மரம் -சவுக்கு மரம்
கும்பிளி- குமிழி
கொதும்பு -தென்னம் பாளை
கோதம்பு - கோதுமை
சாணாங்கி -சாணம்
சாரம்- லுங்கி
செறை- தொல்லை
தள்ளை -தாய்
தாக்கோல் -பூட்டு சாவி
தொறப்ப - துடைப்பம்
தெரளி இலை -பிரிஞ்சி இலை
படக்கு -பட்டாசு
பயினி -பனை பதனீர்
பலிசை- வட்டி
பய - ஆண்
பெண்ணு - பெண்
பாச்சா -கரப்பான்பூச்சி
பூச்சை - பூனை
பீயாத்தி -கத்தி
போஞ்சி -எலுமிச்சை பழரசம்
மற்றவன் - அந்த இடத்தில் இல்லாதவரை குறிப்பது
முக்குவர்- மீனவர்
முடுக்கு -சந்து
மொளுதிரி- மெழுகுத்திரி
மோளே- செல்ல மகளே
மோனே -செல்ல மகனே
வச்சூத்தி - புனல்
விளம்பு -பரிமாறு
வீட்டு நடை- வீட்டு வாசற் படி
வீடி- பீடி
இவைத் தவிர இன்னும் பல வார்த்தைகள் கன்னியாகுமரி வழக்கு மொழியில் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்ட வட்டார மொழிகள் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் புரியவில்லை என்று கூறிவந்தாலும், இந்த மொழியை எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனர். பெரும்பாலனோருக்குத் தெரிந்த எழுத்தாளர் ஜெயமோகன் சில நாவல்களில் குமரி மாவட்ட மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.
அதேபோல் எழுத்தாளர் குமரசெல்வா, தனது எழுத்துக்கள் அனைத்திலும் குமரி மாவட்ட மொழியை மட்டுமே பயன்படுத்துகிறார். இது பற்றி 'நான் ஏழைகளின் மொழியைப் பயன்படுத்துகிறேன்' என்று அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் குமரசெல்வா
குமரியின் வட்டார மொழிகளின் நடைமுறை பற்றி எழுத்தாளர் குமரசெல்வா-வை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர் விளவங்கோடு குமரி தமிழிலேயே என்னிடம் பேசினார். “பெரும்பாலான குமரி மக்கள் வெளியூர்களில் கன்னியாகுமரி மொழியைப் பேசினால் தவறாக நினைப்பர் என்று சிந்திக்கின்றனர். சென்னையின் ஒரு உணவகத்தில் நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். அந்த உணவகத்தில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் 'இஞ்ச வாவல என்று' என்று கன்னியாகுமரி தமிழில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். நான் உடனே அவர்களிடம் 'லே இஞ்ச வாவல சாம்பாறு விடுவல' என்று கூறினேன். உடனே அவர்கள் அண்ணா நீங்கள் கன்னியாகுமரி மாவட்டமா என்று ஆச்சரியமாகப் பார்த்தனர். இதுபோன்று தான், சாதாரண மக்கள் வெளியூர்களிலும் கன்னியாகுமரி தமிழையே பயன்படுத்துகின்றன. ஆனால், ஐ.டி போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களே இதை விரும்புவதில்லை.

ஒரு கதை உள்ளது. விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மதுரைக்குச் சென்றாராம். அங்குச் சென்றதும், அங்குள்ள மக்களைப் பார்த்து, இனி செந்தமிழில் பேசவேண்டும் என்று அவர் முடிவுசெய்துள்ளார். அவர் ஒரு பழக்கடைக்குச் சென்றுள்ளார்.
விளவங்கோடுகாரர் - வணிகரே பழங்கள் உள்ளனவா?
வியாபாரி - இங்க இருகுறத பாத்தா உனக்கு பழமா தெரியலயாடா?
விளவங்கோடுகாரர் - ஒரு பழம் என்ன விலை?
வியாபாரி - ஒரு பழம் இரண்டு ரூபாய்
விளவங்கோடுகாரர் - ஒரு ரூபாய்க்கு இரண்டு பழங்கள் தரக்கூடாதா?
வியாபாரி - தரலாமே
விளவங்கோடுகாரர் - அப்படி என்றால் இரண்டு பழங்களை பூயும்
வியாபாரி- பூயுமா? அப்படினா
விளவங்கோடுகாரர் - (கோபமடைந்து) வேலையும் மயிரும் காட்டாத ரெண்டு பழத்த இணிவெல
என்றாராம். அவ்வாறு தான் என்னதான் செயற்கையாக பேசினாலும், அவர்களை மீறி வட்டார மொழிகள் வெளிப்படத்தான் செய்யும்.
மொழியலாளர்கள் கருத்துப்படி, 12 கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே ஒரு மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர். தமிழ் மொழி பேசினாலும், அது இடங்களை பொறுத்தும், சாதிகளை பொறுத்தும் மாறுபடுகிறது.
'நிக்கள நேலி எக்கு நிக்க
எக்கள நேலி யாரு நிக்கும்'
(பொருள் - முறிக்கப்பட்ட மரத்தை பார்த்து ஆதிவாசி: உனது நிழலில் எனக்கு நிக்க, எனது நிழலாக யார் நிற்பார்கள்)
இது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுரேஷ் சாமியார் காணி எழுதியது. இதை பார்த்த பிரெஞ் இன்ஸ்டிடூட்டை சேர்ந்த கோதண்டம் என்பவர் இந்த 'எக்கு' என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் உள்ள 'எற்கு' என்ற வார்த்தை தழுவியிருக்கிறது. இதை உங்கள் ஊரில் ‘எக்கு’ என்று இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
தோப்பில் மீரான் தான் ஒரே நாவலில் 5 விதமான தமிழைப் பயன்படுத்துபவர். அவரது 'கூனன் தோப்பு' என்ற நாவலில் இஸ்லாமியர்களுக்கான தமிழ், மீனவர்களுக்கான தமிழ், கள் விற்கும் நாடாரின் தமிழ், ஊராணி இனத்தைச் சேர்ந்த மக்களின் தமிழ், நாயர்களின் தமிழ் ஆகியவை பயன்படுத்தியிருப்பார்.
இங்கிருந்து உருவாகும் எழுத்தாளர்கள் ஒவ்வொரு வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளனர். அதேபோல் பன்முகத்தன்மை கொண்டதாகவே கன்னியாகுமரி மாவட்டத்தின் வட்டார வழக்குகள் இருக்கிறது. ஒரு ஆதிவாசி பிரிவைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை, நேர் எதிரே கடற்கரையைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. உள்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை வேறு விதமாக உள்ளது. இந்த ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றப்படி, மொழியின் தன்மை மாறுபடும்.
'படிஞாயிறு' என்ற வார்த்தையின் அர்த்தம் 'ஞாயிறு படிக்கும் இடம்' என்பது தான். இந்த அழகான வார்த்தையை பலர் மலையாள வார்த்தை என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், அது ஒரு தமிழ் வார்த்தை. என்ன 'சேலா' இருக்கு? 'சேலு' என்ற வார்த்தையும் தமிழ் வார்த்தையே. 'சந்தம்' என்ற வார்த்தையும் தமிழ் வார்த்தைதான். ஆனால், இவற்றைப் பேசினால் நம்மை மலையாளி என்கின்றனர்.
இது இப்படி இருக்க, தமிழ்நாட்டில் பயன்படுத்தும் ஊர்ப் பெயர்களில் கூட வேற்று மொழி கலந்துள்ளது. ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்றே பெயர் வைத்துள்ளனர். ஆனால் கேரளாவில் திருவனந்தபுரம், திருவல்லா என்று தமிழை அடிப்படையாகக் கொண்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள குட்டநாடு, செங்குட்டுவன் பெயரை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்
தப்பியார் அட்ட களத்து.
என்ற களவழி நாற்பது பாடலில் இடம்பெற்றுள்ள 'குக்கில்' பறவையைத் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உக்கில் பறவை என்று குறிப்பிடுகின்றனர். இதைத் தமிழகத்தில் செம்போத்து என்று குறிப்பிடுவதால், அவர்கள் இது மலையாள வார்த்தை என்று நினைக்கின்றனர்.
தமிழை காப்போம் என்று அரசியல் கட்சிகள் போராடுவது, ஒரு நுண் அரசியல் முறைதான். அதுபோல், அரசியல் ரீதியாகப் போராடுபவர்கள் சிறிய மக்களின் வாழ்க்கையில் இருக்கும் தமிழை உணராமல் தமிழைக் காப்போம் என்று பேசி வருகின்றனர். ஒரு சங்க இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் கன்னியாகுமரி வட்டாரத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் 'போத்து' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். நாம் 'போத்து' என்று பேசினால் உடனே மலையாள வார்த்தையை பயன்படுத்துகிறோம் என்பர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறுசிறு வட்டாரங்கள் பேசும் தமிழைப் புரிந்துகொள்ளாமல் ஒரு பொதுத் தமிழை உருவாக்க முடியாது. தமிழில் பயன்படுத்தும் இலக்கண முறை அதிக அளவில் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அதில் 'அத்து' என்ற சொல்லை இங்குள்ள மக்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். ‘மலையத்து போனான், வெயிலத்து போனான், போக்கத்து போச்சு’ போன்ற ‘அத்து’ சாரிகை இங்கு தான் பயன்படுத்தப்படுகிறது. சங்க இலக்கியத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட வார்த்தைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘நான் ஏழைகளின் தமிழ்தான் எழுத நினைக்கிறேன்’ பணக்காரரின் தமிழில் எழுத விரும்பவில்லை. செல்போன்களில் வரும் பல ரெக்காடிக்கல் உரையாடல்கள் பொது தமிழ் என்று கூறுகின்றனர். அது அருவருக்கத்தக்க வார்த்தைகளாகவே இருக்கின்றன. இது பொது தமிழ் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழில் ‘புனல்’ என்ற வார்த்தை உள்ளது. அது ஆங்கிலத்தில் funel என்ற வார்த்தையைத் தழுவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 'வச்சூத்தி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் பொது தமிழில் கொண்டுவரக்கூடாது?. இப்போதும் ஏன் ஆங்கிலத்தில் அதைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 'திம்ஸ் கட்டை' என்று ஒரு பொருளை குறிப்பிடுகின்றனர். அதை குமரி மாவட்ட மக்கள் 'நிலம் தல்லி’ என்று கூறுகின்றனர். திம்ஸ் கட்டை எந்த மொழியிலுள்ள வார்த்தை என்று தெரியவில்லை. சினிமாவில் பயன்படுத்தும் வார்த்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் மொழிதான் கூர்மையான மொழி. இதைப் படைப்பாளிகள் தான் அதிகம் வெளிப்படுத்துகின்றனர்.” என்றார்.
எழுத்தாளர் குமரசெல்வா கயம், குன்னிமுத்து, உக்கில் போன்ற பல நாவல்களை எழுதியுள்ளார். இவை அனைத்திலும் குமரி மாவட்டத்தின் விளவங்கோடு வட்டார மொழியையே பயன்படுத்தியுள்ளார்.
கவிஞர் புஷ்பராஜ்
கவிஞர் புஷ்பராஜ் குமரியின் வட்டார மொழி பற்றி பேசுகையில், “கிராமத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள் பல, தூய தமிழ் வார்த்தைகளாக இருக்கிறது. வட்டார வழக்குகளில் இருக்கும் தலித், சமயம் அடிப்படையிலான வார்த்தைகளைப் புறக்கணித்து தமிழ்த் தேசியம் என்று கூறி, புதிய சாதி ரீதியிலான வார்த்தைகளைக் கட்டமைக்கின்றனர். இதுவும் ஒரு மத ரீதியான போக்கு போன்றே அமைகிறது. பார்பனிய பிஜேபியின் நடைமுறைகளும், தமிழ்த் தேசியத்தின் சிந்தனைகளுக்கு இணையாக உள்ளது.
இதுபோன்று தான் ஒவ்வொரு சாதி ரீதியிலான சுடலைமாடன், கருப்பன் போன்ற சிறு கிராம வழிபாட்டு முறைகளையும் மொழிகளையும் மறுத்து, தற்போது தமிழ் பொது தேசிய வழிபாட்டு முறை என்று ஒன்றை பயன்படுத்துகின்றனர். இதுவும் ஒருவிதமான அடக்குமுறை சார்ந்த விஷயமாக உள்ளது.
குமரி மக்கள் பயன்படுத்தும் 'தாக்கோல்' என்ற வார்த்தை
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் தூய தமிழ் பேசும் வழக்கம் உள்ளது. 'பழஞ்சி' என்பார்கள். அது தமிழில் உள்ள பழைய கஞ்சி என்ற வார்த்தையை இணைத்துக் கூறுகின்றனர். நகரமயமாதல் காரணமாகப் பழஞ்சி என்ற வார்த்தை பயன்பாடு முற்றிலும் முடங்கிவிட்டது. 'தாக்கோல்' என்ற அழகான வார்த்தை 'பூட்டு' என்று பயன்படுத்துகின்றனர். 'தாக்கோல்' என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதும் வழக்கத்தில் உள்ள வார்த்தை. இது சங்க இலக்கியங்களில் கூட இடம்பெற்றுள்ளது.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வார்த்தைகள் தற்போது எங்களிடம் இல்லை. இதைப் பார்க்கும் போது இது முற்றிலும் அழிந்துவிடும் என்ற அச்ச உணர்வு தோன்றுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகள் வெளி உலகிற்குச் சொன்னாலும், மற்ற மாவட்டங்களைப் போன்று பேச்சு வழக்கு அழிந்து கொண்டே செல்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் கேரளாவிற்குச் சென்றாலும், மலையாள மொழியில் பேசுகின்றனர். ஆனால், கேரளாவிலிருந்து இங்கு வருபவர்கள் தமிழில் பேசுவதில்லை. இங்கிருப்பவர்கள் தங்களது கிராமிய உணர்வுகளை எளிதில் மறந்துவிடுகின்றனர். பொதுவாகக் குறிப்பிடும் தூய தமிழில் பேசினால் தான், தங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்ற எண்ணம் இங்குள்ள மக்களுக்கு அதிகம் உள்ளது. எங்கள் மொழி சிறந்தது என்ற உணர்வு இல்லாமல், இது கொச்சை மொழி என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது பற்றி இங்கிருக்கும் மக்களுக்கு உணர்த்த யாரும் இல்லை. எல்லோரும் பொது தேசிய தமிழை நோக்கியே நகர்கின்றனர்.
தற்போது குமரி மக்கள் திட்டுவதற்கு பயன்படுத்தும் 'கள்ளிவெட்டிச்சாரி போவான்' என்ற வார்த்தை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'கள்ளிவெட்டிச்சாரி' என்று குறிப்பிடுவதுண்டு. அது முந்தைய காலங்களில் காலரா நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு, அதற்கு மேல் கள்ளிச் செடிகளை வைத்துவிட்டுத் திரும்புவர். அவர்கள் திரும்பி வரும்போது, அந்த குடும்பத்தில் அடுத்த நபர் காலரா நோயால் பாதிக்கப்படுவார். அதைக் குறிப்பிடும் விதமாகவே 'கள்ளி வெட்டிச்சாரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அது நாளடைவில் ஒன்றுக்கொன்று சண்டைகளின் போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். அது ஒரு குடும்பத்தினர் சந்ததி இல்லாமல் அழிந்துபோகட்டும் என்பதைக் குறிப்பிட்டு இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு வட்டார வழக்கில் இருக்கும் சரியான வார்த்தைகளைத் தேடி எடுக்காமல், வேற்று மொழிகளில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். அதைப் பள்ளிக்கூட பாடங்களிலும் சேர்க்கின்றனர். தமிழ் தேசியவாத குழுக்கள் தூய தமிழை நடைமுறைப்படுத்துவதாக கூறி, வேற்றுமொழி வார்தைகளையே நடைமுறைப்படுத்துகின்றனர்.
திராவிடம் பேசுபவர்களும், தமிழ் மொழியை வளப்படுத்த எதுவும் செய்யவில்லை. அவர்களும் உரைநடை தமிழையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.” என்றார்.
