தங்க கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என பினராயி விஜயன் அறிவிப்பு!
ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்க கடத்தல் விவகாரம் குறித்து பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், வழக்கில் சம்மந்தப்பட்ட யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தங்க கடத்தல் விவகாரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ், சஜித், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகியவற்றுக்கு பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பினராயி விஜயன், “தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களை கேரள அரசு பாதுகாக்காது. என்.ஐ.ஏ விசராணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தீவிரவாதிகளுக்கு கடத்தல் பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ கூறியுள்ள நிலையில், இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் அலுவலகத்திலும் விசாரணை நடத்தலாம். அதற்கான அனுமதியையும் கொடுத்துள்ளேன். உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பில் இருந்த முதன்மைச் செயலர் சிவசங்கர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஸ்வப்னா எப்படி அரசின் ஐடி துறையில் சேர்ந்தார் என்பது பற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று பேசியுள்ளார்.
