உத்தவ் தாக்ரே பதவியேற்பு விழா - மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
இறந்த விவசாயிகளையும், அவர்களின் குடும்பங்களையும் மரியாதை செய்யும் வகையில் 400 விவசாயிகளுக்கு இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
பல அரசியல் அதிர்ச்சிகளை கடந்து நாளை மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே மஹாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்கிறார்.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்திருக்கும் ’மஹா விகாஸ் அகாதி’ கூட்டணியின் தலைவரான உத்தவ் தாக்ரே சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6:40 மணியளவில் பதவியேற்கவிருப்பதாக சிவசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்படும் என்று சிவசேனா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மஹாராஷ்டிரா முழுவதும் இருக்கும் 400 விவசாயிகளுக்கு இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் சிவசேனா தெரிவித்திருக்கிறது. விவசாயிகளையும், இதுவரை பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களையும் மரியாதை செய்யும் வகையில் இந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சிவசேனாவைச் சேர்ந்த விநாயக் ராவத் தெரிவித்திருக்கிறார்.