என் மனைவி சொல்லும் அனைத்திற்கும் நான் தலையாட்டினால் மட்டுமே என் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார் என்று தோனி தன் மனைவியை கேலி செய்திருக்கிறார்.
பாரத் மேட்ரிமோனி நடத்திய விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ”வீட்டில் மனைவி சாக்ஷியே அதிகார மையம்” என்று தன் வெற்றிகரமான திருமண வாழ்வின் ரகசியத்தை உடைத்திருக்கிறார்.
இந்த விழாவில் மேலும் இது குறித்துப் பேசிய தோனி கூறியிருப்பதாவது: வீட்டில் மனைவி சாக்ஷியே அனைத்து முடிவுகளையும் எடுப்பார். அவர் எடுக்கும் முடிவுகளில் நான் எப்பொழுதும் தலையிடுவது இல்லை. ஏனென்றால் என் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நம்புகிறேன்.
நான் ஒரு மிகச் சிறந்த கணவன். ஏனென்றால் என் மனைவி செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய அவரை நான் அனுமதித்துவிடுவேன். அவர் சொல்லும் அனைத்திற்கும் நான் சரி என்றால் சொன்னால் மட்டுமே அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தோனி தன் மனைவியை செல்லமாகக் கேலி செய்திருக்கிறார்.
மேலும் திருமணம் வரை மட்டுமே ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்று கிண்டலாக இந்த விழாவில் அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.