ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவில்பட்டி கிளை சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தனர். ஜூன் 19-ம் தேதி இரவு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை கடுமையாக லத்தியால் தாக்கியுள்ளனர். அதோடு அடுத்த நாள் சாத்தான் குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பிட்னஸ் சான்றிதழை காவல்துறையினர் வாங்கியுள்ளனர். அதன்பிறகு மாஜிஸ்திரேட் ஒருவர் வாரண்ட் வழங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலேயே தந்தை ஜெயராஜ் உயிரிழக்க, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்துள்ளேன். 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 29, 2020
இந்த நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்று எம்.பி.கனிமொழி கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து தந்தை மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி, கோவில்பட்டி சிறைத்துறை ஐ.ஜி ஆகியோரும் விளக்கமளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் புகாரின் அடிப்படையில் பதில் தர தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இத்துடன் ஜெயராஜ் மரணம் பற்றி கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories
'காவல்துறையே கொலை செய்தால் யாரை அழைப்பது?' | நீதி கேட்கும் திரையுலகம் #JusticeForJeyarajAndFenix
சாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கில் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு : எஸ்.ஐ கைது
ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரண வழக்கை மத்திய புலனாய்வு துறை கையில் எடுக்கிறது