கேரள தங்கக் கடத்தல் வழக்கு: இதுவரை 180 கிலோ தங்கம் கடத்தல்! பினராயி விஜயனுக்கு எதிர்கட்சிகள் நெருக்கடி!
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதலமைச்சருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி 180 கிலோ தங்கம் வரை கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தங்கக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ், சஜித், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என் ஐ ஏ) விசாரணை நடத்தி வருகிறது.

தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகியவற்றுக்கு பயன்படுத்தியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் திருவனந்தபுரத்தில் உள்ள அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்போது வரை 20 முறை ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பினராயி விஜயனுக்கு நெருக்கடி
இந்த வழக்கில் முதலமைச்சர் அலுவலகம் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சிகள் முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பினராயி விஜயனின் முதன்மைச் செயலராக இருந்த சிவசங்கர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதலமைச்சருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது. கேரள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரள மாநில எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கடத்தல் விவகாரத்தில் தனக்கு சம்மந்தம் இல்லை என்று முதலமைச்சர் கூறும் நிலையில், தனது அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட தெரியாமலா ஒருவர் இருக்க முடியும். முதலமைச்சர் அலுவகத்தில் பணிபுரியும் நபர்கள் தான் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தெரியாமலா அவர் இருந்திருப்பார்?இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி வரும் நிலையில், அவரையும் விசாரணை செய்ய வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.தனக்கு இந்த வழக்கில் சம்மந்தமில்லை எனக் கூறி தப்பிக்க முயற்சிப்பதை விட தார்மீகப் பொறுப்பேற்று பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

Related Stories
தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்கட்சி! சிபிஐ விசாரிக்க பிரதமருக்கு கடிதம்!
தங்க கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என பினராயி விஜயன் அறிவிப்பு!
கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! பினராயி விஜயனுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!
கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் சிக்கிய தங்கம் மற்றும் ரொக்கம்! முழு விவரம்!