தமிழக அரசியலை மாற்றி அமைக்குமா சசிகலா வருகை? சூடுபிடிக்கும் தேர்தல் களம்
அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
2020 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகள் பல குழப்பத்தில் இருக்கின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று உறுதி செய்யப்பட்டாலும், பாஜகவுடனான கூட்டணியால் பல சிக்கல்கள் நீடித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல் வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலையாக இருக்கும் நிலையில் அக்கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளிப்படையாக விவாதிக்கவில்லை என்றாலும், கட்சியினர் சசிகலா விடுதலையைப் பெரிய விஷயமாகவே பார்க்கின்றனர்.
சசிகலா
2014-ம் ஆண்டு செத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகிய நான்குபேரும் குற்றவாளிகள் என்று, கர்நாடக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் நான்கு பேரின் தண்டனையும் ரத்து செய்து, விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு விசாரணையிலிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் மரணமடைந்தார். 2017-ம் ஆண்டு இறுதி தீப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இதை அடுத்து பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
மூவரின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சுதாகரன் தரப்பில் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது. சசிகலா தரப்பில் 10 கோடி ரூபாயை வரையோலையாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் செலுத்தினார். எனவே அவர்கள் விடுதலையாவது உறுதி என்று கூறப்படுகிறது.
நன்னடத்தை விதிகளின்படி, சசிகலா முன் கூட்டியே விடுதலை கோரியுள்ள நிலையில், அந்த மனு பரிசீலனையில் உள்ளது. அது ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பின், தஞ்சையில் உள்ள வீட்டில் ஓய்வெடுப்பார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “சசிகலா விடுதலைக்குப்பின் ஓய்வெடுப்பார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. அவர், தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதி.” என்று தெரிவித்தார்.
சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இது பற்றி ஊடகங்களில் பல தரப்பட்ட தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.
இரட்டை தலைமை பிரச்சனையில் அதிமுக
அதிமுகவை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் பழனிசாமி போராடி வந்தார். பின்னர் தேர்தல் நெருங்கி வருவதால், முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் ஏற்பட்டது. பழனிசாமி தனக்கு ஆதரவான அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவான நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வந்தார். இவ்வாறு அதிமுகவில் சலசலப்பு நீடித்தது. இந்நிலையில், இறுதியாக அக்டோபர் 6-ம் தேதி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
எனவே கட்சியின் பொறுப்புகள் அனைத்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால், அதற்கான எந்த அறிவிப்பையும் அதிமுக தலைமை வெளியிடவில்லை.
அதன் பின்னரும் ஓ.பன்னீர்செல்வம் பல இடங்களில் பழனிசாமியைத் தவிர்த்து வருகிறார். அவர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றால், பலம் குறைந்துவிடும் என்பதால் பழனிசாமி அமைதி காப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா-அதிமுக
அதிமுகவின் உட்கட்சி பூசல் ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிடிவி தினகரன் செப்டம்பர் 20-ம் தேதி திடீரென்று தனி விமானம் மூலம் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, சசிகலாவின் விடுதலை குறித்தும், இரட்டை இலை வழக்கு குறித்தும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்ய சென்றதாக அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், டிடிவி தினகரன் சசிகலா விடுதலை மற்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது பற்றி பேசியதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அவர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் அவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஓய்விலிருந்ததால் சந்திக்க முடிவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உள்ள செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் உள்ள முக்குலத்தேவர் சமூகத்தினர், அவர்கள் சாதியைச் சேர்ந்த சசிகலாவை மீண்டு கட்சிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்குத் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே ஓ.பி.எஸ் சசிகலா பக்கம் சாயும் மனோபாவத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இது சசிகலாவைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் என்று பேச்சு எழுந்தது.
அத்துடன் ஓபிஎஸ்க்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு உள்ளது. அதைச் சமீபத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற இருகட்சிகளின் குழப்படியான வார்த்தை போரிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

பதவியைத் தக்க வைக்கப் போராடும் பழனிசாமி
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகள் மீது முதலமைச்சர் பழனிசாமிக்குச் சந்தேகம் இருந்து வருகிறது. எனவே மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாகத் தன்னை தயார்ப்படுத்தும் நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவோடு கைகோத்து விட்டால், கட்சியிலுள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஐந்து அமைச்சர்கள் வரையிலும் எடப்பாடி தலைமையை உதறிவிட்டு ஒபிஎஸ் பக்கம் சென்றுவிட வாய்ப்புள்ளது. எனவே இது வரும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கும். எனவே அரசியல் ரீதியாக சசிகலாவை முதலமைச்சர் பழனிசாமி எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.
தலைவர்கள் கருத்து
புகழேந்தி இது குறித்துத் தெரிவிக்கையில், “சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். சசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை. டிடிவி தினகரன், தன் ஆசைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் துவங்கினார்.
கட்சியை வளர்க்க எந்த வேலையும் செய்யாமல் ஒரு தனியார் கம்பெனியை போல, தன் இஷ்டத்துக்கு நடத்தினார். இப்போது தன் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லி சென்று பாஜகவிடம் சரணடைந்து இருக்கிறார். சொத்துகளையும், பணத்தையும் காப்பாற்றிக் கொள்ள டி.டி.வி. தினகரன் என்ன சமரசம் வேண்டுமானாலும் செய்வார்.” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், வராவிட்டாலும் அதிமுகவினருக்குக் கவலையில்லை என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிமுகவில் தலையிடாதவாறு ஆட்சியை நடத்துவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “சசிகலா பற்றி எங்களுக்குக் கவலையில்லை. சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வலுப்பெறும். அதிமுகவில் இபிஎஸ், ஓ.பி.எஸ் தான் தலைவர்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்
சசிகலா விடுதலை குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சின்னம்மா விடுதலையான பிறகே ஏதுவாக இருந்தாலும் பேசுவோம் அதுவரை பொறுத்திருங்கள். இன்னும் சில நாட்கள் தானே உள்ளது" என்று தெரிவித்தனர்.
டிடிவி தினகரன், பொது வெளியில் இது பற்றி எதுவும் பேசவில்லை. அவரும் சசிகலா வருகைக்குப் பின்னரே ஏதுவாக இருந்தாலும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா விடுதலையாகும் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், விடுதலை செய்யும் நாளில் கர்நாடக சிறைத்துறை மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா விடுதலையாகும் நாளில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை நாளில், ஏராளமான தொண்டர்கள் கர்நாடக சிறையின் அருகில் குவிய வாய்ப்புள்ளது. எனவே தொண்டர்கள் வரும் வாகனத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக வழக்கமான கைதிகளை விடுதலை செய்யும் நேரத்தைத் தவிர்த்து சற்று தாமதமாக விடுதலை செய்யக் கர்நாடக சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. அவரை கர்நாடக சிறைத்துறை சார்பாகக் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை வந்து விட்டுச் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இது திட்டமிடப்பட்டாலும், அப்போதைய சூழலுக்கு ஏற்ப சில விதிகள் மாற்றப்படலாம்.

Related Stories
மோதும் பாஜக-அதிமுக! #வெற்றிநடை_போடும்_தமிழகம், ஹேஷ்டாக் டிரெண்ட் செய்யும் அதிமுக...