ஜனவரி 16வரை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவிழக்கவேண்டும் அல்லது தெற்கு சீன பெருங்கடலை நோக்கி நகரவேண்டும்.
கடந்த 106 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் பலத்த மழைப் பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே 2021 மழைக்காலத்துடன் தான் துவங்கியுள்ளது. இந்நாட்களில் வறண்ட வானிலை மற்றும் அதிகாலையில் கடும் குளிர் நிலவுவதே வழக்கம். ஆனால், இந்த ஆண்டை பொறுத்த வரையில் அது முற்றிலும் மாறுபட்டுள்ளது.
மாதம் துவங்கிய மூன்று தினங்களில் சென்னையில் மழை துவங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் தென் மாவட்டங்களிலும் மழை பெய்யத் துவங்கியது. கடந்த வாரத்தில் சென்னையில் பெய்த மழை சராசரியை விட 3,000 சதவீதத்திற்கும் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Heavy rain pushing into southern #TamilNadu & northern #SriLanka. Rain will continue across Tamil Nadu, #Kerala & Sri Lanka into Friday. Drier pattern expected over these areas next week, but light rains can briefly return late next week. NE monsoon should finally wind down. pic.twitter.com/GDZ7aT8cHS
— Jason Nicholls (@jnmet) January 11, 2021
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வானிலை மாற்றம் குறித்த பதிவுகளைச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆவணப்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது பெய்யும் மழை மிகவும் அரிதானது. 1915-ல் சென்னை நகரத்தில் ஜனவரி மாதத்தில் 21.7 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. தற்போது, 106 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் 16.6 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
அதேபோல், அடுத்தடுத்த மாவட்டங்களிலும் இந்த மழையின் தாக்கத்தை நாம் பார்க்க முடியும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து, பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, “மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 16-ம் தேதி வரை கனமழை பெய்யும். 17-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக் கூடும். இது வரை கடலூர், புவனகிரி, திருநெல்வேலி, மணிமுத்தாறு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவலை நான் வெளியிடுவதற்கு முன்பே மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் (13.01.2021) சென்னை வானிலை ஆய்வு மையம் வரை படத்துடன், செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி அடுத்த இரண்டு நாட்களுக்கு உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் வழக்கமாகக் குளிர்காலமாகவே இருக்கும்.
Ground Frost is also very likely in isolated pockets over Uttarakhand, Punjab, Haryana & Chandigarh, West Uttar Pradesh and north Rajasthan during next 2 days.
— India Meteorological Department (@Indiametdept) January 13, 2021
♦ Dense to Very Dense Fog conditions at isolated places very likely over Northwest India during next 4-5 days.
அதேபோல் தமிழகத்திலும், அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலடுக்கு சுழற்சி:
பொதுவாகக் கடல் மட்டத்தில் உருவாகும் சுழற்சியானது, காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அப்பக்கம் மழையாக நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மேலடுக்கு சுழற்சி வலுவடையும் போது, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதன் அளவை பொறுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த மண்டலம் என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்த சுழற்சியானது கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேலே, அதாவது 300 மீட்டாருக்கு மேலே உருவாகும் போது, அது மேலடுக்கு சுழற்சி எனக் கூறப்படுகிறது.
வானிலை ஆய்வாளர் பார்த்தசாரதி
ஜனவரி மாத மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பார்த்தசாரதியிடம், தொடர்பு கொண்டு கேட்ட போது, “வடகிழக்கு பருவமழையின் காலம் என்பது அக்டோபர் துவக்கத்திலிருந்து, டிசம்பர் மாதம் இறுதி வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணக்கிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சராசரியாக அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தான் துவங்கும். இந்த வருடம் அக்டோபர் 28-ம் தேதி தான் துவங்கியது. நவம்பர் மாதம் 15 வரை இயல்பை விட மிகவும் குறைவான மழையே பெய்தது. நவம்பர் 15க்கு பின் அதிக அளவில் மழை பெய்தது.
காற்றின் திசையைக் கொண்டே பருவமழை கணக்கிடப்படுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தரை மட்டத்திலிருந்து 3 கிலோமீட்டர் உயரத்தில் காற்றின் விசையை பொறுத்தே பருவமழையின் சாராம்சத்தைக் கணக்கிடுகின்றனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த கீழடுக்கில் தென்மேற்கு திசையிலிருந்து காற்றும் வருகின்றது. அந்த காற்று ஈரப்பதத்தைச் சுமந்து வரும். இதன் மூலமே மழை பெய்யும். அதேபோல் தற்போது வடக்கு-கிழக்கு திசையிலிருந்து காற்று வருகின்றது. அந்த காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே இது வடகிழக்கு பருவமழையாகவே கருதப்படும்.

வடதுருவத்திலிருந்து வரும் காற்றும், தென் துருவத்திலிருந்து வரும் காற்றும் இணைகின்ற ஒரு இடம் உள்ளது. அது இப்போது தென் துருவத்தில் இருக்கும். காரணம் தற்போது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கோடைக்காலம். அந்த சூரியனைத் தொடர்ந்தே இந்த காற்று நகர்கிறது. ITC zone (Intertropical Convergence Zone) கீழ் இருப்பதனால் புயல் உருவாக வாய்ப்பு குறைவாகவே இருக்கின்றது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல் வந்தபோது ITC zone தெற்கு வங்கக் கடலையொட்டி இருந்தது. கடல் தட்ப வெப்பநிலையைப் பொறுத்து, நீராவி அதிகமாகி மேகமூட்டத்தை அதிகரிக்கும் இவ்வாறு வளிமண்டல அலை உருவாகிறது. இது அதிகரிக்கும் போது புயல் உருவாகும். நவம்பர் 15க்கு பின் இந்தியப் பெருங்கடலில் வளிமண்டல அலை அதிகரித்து இருந்தது. எனவே அடுத்தடுத்து இரண்டு புயல்களைத் தமிழகம் எதிர்கொண்டது.
இந்தியப் பெருங்கடலில் ஈரப்பதம் மிகுந்த காற்று அதிகம் உள்ளதால் தென் தமிழகத்தில் மழை பெய்கிறது. காற்று மேலே எழாததால், வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
மார்கழி மாதத்தில் மழை பெய்வதில்லை. அதற்கு முந்தைய மாதத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீர் அதிகரித்திருக்கும். மீண்டும் இப்போதும் பெய்யும் மழை ஆறுவழியாகக் கடலிலேயே கலக்கிறது. அதேபோல் ஏற்கனவே நிலத்தடி நீர் அதிகம் இருப்பதால், தற்போதைய நீர் நிலத்திற்குள் செல்வதில்லை. விவசாயம் செய்திருப்பவர்களின் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
ஜனவரி 16வரை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலடுக்கு சுழற்சி வலுவிழக்கவேண்டும் அல்லது தெற்கு சீன பெருங்கடலை நோக்கி நகரவேண்டும். அடுத்த இரு நாட்களுக்குத் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தெற்கு கடலோர பகுதிகளில் உசார் நிலையில் இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு அளவு மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.” என்றார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீர்ப் ஜான்
டிவிட்டர் பக்கத்தில் ஜனவரி மாத மழை குறித்துப் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், “ஜனவரியில் மழை என்பது சற்று ஆச்சரியமான ஒன்றுதான். இந்த மழை, டெல்டா மாவட்டங்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. கடலூரில் புயல் உருவாகாமல் 200-300 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும், 100-200 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஜனவரி 17க்கு பின் வறண்ட வானிலை நிலவக் கூடும், ஆனால் பிப்ரவரி மாதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
What the hell, really fedup and want the rains to stop. The rains in last 24 hrs on 13.01.2021. Cuddalore and Delta are badly affected. Down south all Dams are overflowing. NEM 2020 is relentless. What we are seeing this January is historic.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) January 13, 2021
பருவம் தவறிய மழையால் ஏற்படும் பாதிப்புகள்
கடந்த மாதத்திலும் தமிழகத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக, இந்த மாதத்தில் பெய்து வரும் மழை, நிலத்திற்குக் கீழ் செல்லாமல் மேல் பகுதியிலேயே தேங்கி வருகின்றது. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி அருகே குறிச்சி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால், கும்பகோணம் உள்ளிட்ட பகுதியிலும் தற்போது அறுவடைக்குத் தயாரான ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் சேதமடைந்தன.
Delta yesterday !! pic.twitter.com/J71sHCLvF4
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) January 13, 2021
பொங்கல் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், தஞ்சை அருகே சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர், துறையுண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கான செங்கரும்புகளை அறுவடை செய்து வயலிலிருந்து வெளியே கொண்டு வர முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.
கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள் பல தண்ணீரில் மூழ்கியதால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் வீணானது.

Related Stories
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை
தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தொடர் மழையால் 8 மாவட்டங்களுக்கு விடுமுறை- சென்னையில் பள்ளிகள் இயங்கும்