எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு- கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம்!
எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
எஸ்ஐ வில்சனை கொன்றதற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை
தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இரவுப் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சில தினங்களுக்கு முன் 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நோக்கி பாய்ந்த 4 குண்டுகளில் 2 அவரது உடலைத் துளைத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல் துறையினரின் அஞ்சலிக்குப் பின் வில்சனின் உடல் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வில்சனை சுட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட தவுபீக், அப்துல் சமீம் ஆகிய இருவரும் இன்று களியக்காவிளை காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம்
இருவரிடமும் நடைபெற்ற விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்ப்பு இருப்பதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேசிய புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பலரையும் கைது செய்து வருவதால் எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அதன்பின் இவர்களிடம் விசாரணை நடைபெறும்.
