நாட்டைத் துண்டாடிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நாள் இன்று!
எவ்வளவு வெறி இருந்தால் மக்கள் சுத்தியல்களாலும், கடப்பாரைகளாலும் மட்டுமே பெர்லின் சுவரை இடித்து தள்ளி இருப்பர்.
இரண்டாம் உலகப்போர் பல லட்சம் மக்களைப் பலி கொண்டது அனைவரும் அறிந்ததே. ஹிட்லர் என்னும் தனி மனிதரின் வீழ்ச்சியை உலக நாடுகள் கொண்டாடி தீர்த்தன. நாஜிக் படைகள் இனி இல்லை என்பதால், ஜெர்மன் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று எண்ணிய நேரத்தில், இந்த பெர்லின் சுவர் பலரது வாழ்கையையும் புரட்டிப்போட்டது. எத்தனை போராட்டங்கள்? எத்தனை உயிரிழப்புகள்?
பெர்லின் சுவர் உருவான கதை
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் வீழ்ந்தன. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் தத்தளித்தனர். பிரான்ஸ், பிரிட்டன், சோவித் யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் ஜெர்மனியை பங்கு போட்டுக்கொண்டன. ஒருசில ஆண்டுகளில் சோவித் யூனியனை மட்டும் தனியே விட்டுவிட்டு மற்ற மூன்று நாடுகள் அதற்கு எதிராக ஒன்றிணைந்தன. கிழக்கு ஜெர்மனி, கிழக்கு பெர்லின் சோவித் யூனியன் கையில் இருந்தது. ஆனால் அந்த மக்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. ஹிட்லர் மறைந்த மகிழ்ச்சியை விட மீண்டும் இப்படி சிக்கிக் கொண்டோமே என்ற எண்ணமே தீயாய் எழுந்தது.
மேற்கு ஜெர்மனியில் தொழில் புரட்சி முழு ஜெர்மனியையும் கவர்ந்தது. சோவியத்தின் அடக்குமுறையை பிடிக்காத கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மேற்கு நோக்கி படையெடுத்தனர். நிலைமை மோசமாவதைக் கண்டு சுதாரித்த சோவித் யூனியன் அவர்களை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. மக்கள் பலர் சென்றதால் அங்கே பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. கிழக்கில் உள்ள மக்கள் வெளியே செல்லமுடியாதபடி 150 கிலோ மீட்டருக்கு சுவர் அமைக்கும் பணியை 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோவித் யூனியன் கட்டத்தொடங்கியது. அதன் முதற்கட்டமாக முள் வேலி போடப்பட்டது. அதன்பின் நிரந்தரக் கட்டுமானச் சுவர் வேகமாக சில ஆண்டுகளில் கட்டப்பட்டது.
அவமானச்சுவர் இடிக்கப்பட்டது
ஒரே நாடு இப்படி துண்டுபட்டு கிடந்தது. உறவுகளையும் நண்பர்களையும் பிரிந்து கிழக்கு பெர்லின் மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர். பலத்த காவலையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் தப்பிச் செல்ல முயன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 80-களின் கடைசியில் சோவித் யூனியன் கடுமையான நெருக்கடிக்கு நடுவே சிதறியது. கிழக்கு பெர்லின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் 1989ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள் சுவரைத் திறக்க முடிவு செய்தனர். இந்த அறிவிப்பு வெளியானதும் பல ஆண்டுகள் கட்டப்பட்ட சுவற்றை சுத்தியல்களாலும், கடப்பாரைகளாலும் மக்கள் இடித்து தள்ளினர். கிழக்கு பெர்லின் மக்களை மேற்கு பெர்லின் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். தனித்தனியாக சிதறிக்கிடந்த ஜெர்மன் 1990 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்தது. இந்த பெர்லின் சுவரை அமெரிக்கா அவமானச்சுவர் என்றே கூறிவந்தது.
கூகுள் வெளியிட்ட டூடுள்
ஜெர்மன் மக்கள் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 9ஆம் நாளை ஒற்றுமை நாளாக கொண்டாடி வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது பக்கத்தில் பெர்லின் சுவர் படத்துடன் கொண்ட டூடுளை இன்று வைத்து சிறப்பித்துள்ளது.