உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை விடுதலை
5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவு
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரும் திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துகொண்டனர். சாதி மாற்றி திருணம் செய்ததால் கடந்த 2016 மார்ச் 13ஆம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் சிசிடிவியில் பதிவாகியது.
அதனடிப்படையில், கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடந்த இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகன்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தது. மேலும், கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இந்த தூக்கு தண்டனையை தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்து, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாகவும் குறைத்தும் உத்தரவிட்டனர். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால், விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஸ்டீபன் ராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து:
#உடுமலைசங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலை. உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும்;அரசுத்தரப்பு வாதம் வலுவாகஇல்லை என்பதுவுமே காரணங்களாகும். இது ஆணவக்கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும். pic.twitter.com/ZbwYcJF00E
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 22, 2020

குன்னூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளேன். எனது தந்தை விடுதைலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தை நாட உள்ளேன் “ என பேட்டியளித்துள்ளார்.

Related Stories
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: அரசு வழக்கறிஞர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!
ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் : விசிக தலைவர் திருமாவளவன்
'நீதிமன்றத்தை குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. இது நம் சமூகத்தில் இருப்பது' : சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்
“சட்டப் போராட்டத்தைத் தொடருவேன்; ஓய்ந்துவிடமாட்டேன்!” – உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு குறித்து கௌசல்யா கருத்து!