நட நட நட ராஜா! பெட்ரோல், டீசல் விலையுயர்வைப் பற்றிக் கவலைகொள்ளாத நபர்…
ஈ ரோடியே யெக்க ஆக்கரையிலிருந்நு செக்கெண்டில் எடுத்ததா.... என்று பேசத் துவங்கினார். தமிழக எல்லையோர பகுதி என்பதால் என்னிடம் பெரும்பாலும் மலையாள மொழியிலேயே பேசினார்.
வாகனங்களே பயன்படுத்தாத நபர் களியக்காவிளை பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு புத்தாண்டுக்கு மறுதினங்களில் ஒரு நாள் அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் வீடு இருக்கும் இடம் தெரியவில்லை என்றாலும், களியக்காவிளை பகுதியில் கேட்டதும் குளப்புறம் என்ற கிராமத்தில் அவர் வசிப்பதாக வழிகாட்டிவிட்டு சிலர் சிரித்தனர். அதன்பின், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரை பின் தொடர்ந்து வருமாறு கூறி அழைத்துச் சென்று வாகனம் பயன்படுத்தாத நபரின் வீடு இதுதான் என்று காண்பித்தார்.
உடனே வெளியில் வந்த, வாகனம் பயன்படுத்தாத நபரைப் பார்த்து எனக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒல்லியான உடல், 6.5 அடி அளவு உயரம் இருக்கும். பார்க்கச் சரிவர உணவு உட்கொள்ளாத நபரைப் போன்று இருந்தார். அவர் என்னை எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கவேயில்லை. விரைந்து ஏதோ செய்துகொண்டிருந்தார்.

அவரது வீட்டிற்குள் நுழைந்ததும், பழைய ரேடியோக்கள் பல வைக்கப்பட்டிருந்தன. சரி செய்வதற்காக அவரிடம் பலர் கொடுத்திருக்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டேன்.
நான் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. காரணம், அவரது பெயர் எனக்குத் தெரியாது. எங்குச் சென்றாலும், நடந்து செல்வார் என்று மட்டுமே தெரியும். பத்திரிகைகளில் நட ராஜா என்று பல ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது அவரது பெயர் அல்ல என்று எனக்குத் தோன்றியது. முதலில் பெயர் கேட்கலாம் என்று நான் நினைத்திருந்தேன்.
ஈ ரோடியே யெக்க ஆக்கரையிலிருந்நு செக்கெண்டில் எடுத்ததா.... என்று பேசத் துவங்கினார். தமிழக எல்லையோர பகுதி என்பதால் என்னிடம் பெரும்பாலும் மலையாள மொழியிலேயே பேசினார்.
(தமிழாக்கத்தில் அவரது பேச்சு) “இங்கிருக்கும் ரேடியோக்கள் எல்லாம், பழைய பொருட்கள் வாங்கும் இடத்திலிருந்து பணம் கொடுத்து வாங்கி வந்தேன். இதில் பல மாடல்கள் இருக்கிறது. இதை வைத்து ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வீட்டிற்கு வந்தால், இவை தான் என் மனைவியும், பிள்ளைகளும். சில ரேடியோக்கள் ஓடாமல் இருக்கும். அதை நான் வெயர்கள் வாங்கி சரிசெய்து வைத்துள்ளேன்.

இதில் சோனி உள்ளிட்ட பல மாடல்கள் உள்ளன. எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எனவே இது என்ன மாடல் என்று பார்க்கத் தெரியவில்லை. பார்க்க நன்றாக இருப்பதை அவர்கள் கேட்கும் தொகை கொடுத்து எடுத்து வந்துவிடுவேன். 25க்கும் மேற்பட்ட ரேடியோக்கள் வாங்கி வைத்துள்ளேன்.” என்றார்.
வாகனங்கள் பயன்படுத்தாத நபர் என்று மட்டுமே நான் அவர் குறித்து கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அவர் பல சாதனைகள் செய்யத் துடிக்கும் 62 வயது இளைஞர் என்று அப்போது எனக்குப் புரிந்தது. தற்போது ரேடியோக்கள் மீது ஆர்வம் கொண்டு இரண்டு வருடங்களாக அவற்றைச் சேகரித்து வருகிறாராம்.
அவரிடம் உங்கள் பெயர் என்ன என்று முதல் கேள்வி கேட்டேன். “C.ராஜேந்திரன், ஆனால் எல்லோருக்கும் நட ராஜா என்றே அறியப்பட்டுள்ளேன்.” என்றார்.
தொடர்ந்து நீங்கள் ஏன் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்று கேட்டேன். அவர் பேசத்துவங்கினார். “எனக்கு 22 வயது இருக்கும் போது இது போன்று நடக்கத் துவங்கினேன். அதற்கு முன்பு வரை எனக்கு நாட்டுப்புறத்தில் உள்ள விளையாட்டுகள் விளையாட ஆர்வம் இருந்தது. அப்படி இருந்தாலும், நான் ஸ்டேடியத்தில் சென்று விளையாட்டுகளைப் பார்த்ததில்லை. முதல் முறையாக கண்ணூருக்குப் பயணம் துவங்கினேன். முதலில் காலில் செருப்பில்லாமல் 3 கி.மீ நடந்தேன். அப்போது காலில் கொப்புளங்கள் வந்து வலி ஏற்பட்டது. அதன் பின் தொடர்ந்து நடக்கத் துவங்கினேன்.

இதனால் எங்குச் சென்றாலும், பிரபலம் போல் என்னிடம் வந்து பலரும் பேசுவர். இதைப் பார்க்கையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. மனிதன் வாழப் பணத்தை விட மற்றவர்கள் பார்ப்பது போன்று வாழ்வதே சிறந்தது என்று எனக்கு புரிந்தது.
இனி நான் சமாதியானாலும் பரவாயில்லை
தற்போது ஒரு சினிமா பிரபலத்தைப் போன்று என்னையும் பலருக்கும் தெரியும், ஒரு அமைச்சரைப் போன்று என்னையும் பலருக்கும் தெரியும். இதனால் எனக்கு வருமானம் இல்லை என்றாலும், எங்குச்சென்றாலும் மதிப்பு உள்ளது. இனி நான் சமாதியானாலும் பரவாயில்லை. நான் பிரபலமடைய வேண்டும் என்றே இந்த வேடம் பூண்டேன். பல பிரபலங்களைக் காண்பிக்கும் சன் டிவியிலும் என்னைக் காண்பித்தனர். பல மலையாள மொழி பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி செய்திகள் வந்துள்ளது. ஆங்கில பத்திரிகைகளிலும் என்னைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளனர். எனவே நான் உலக அளவில் பிரபலமடைந்துள்ளேன். (கூறிக்கொண்டே டெக்கன்கிரானிக்கல் பத்திரிக்கை செய்தியை எனக்குக் காண்பித்தார்.)

என்னைத் தொலைக்காட்சியிலிருந்து வீடியோ எடுக்க வரும்போது, இப்பகுதியில் உள்ள நபர் ஒருவர், திருநெல்வேலி வரை வாகனம் ஓட்டிச் சென்றாலே மூன்று நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இவர் நடந்தே பல ஊர்களுக்குச் சென்று வருகிறார் என்று என்னைப் பற்றி பெருமையுடன் கூறியிருந்தார்.

2012-ல் சென்னைக்கு நடந்து செல்ல எனக்கு 8 நாட்கள் தேவைப்பட்டது. 1 மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் நடந்தே கடந்துவிடுவேன். அதிகம் தூரம் இருந்தால், 1 மணி நேரத்தில் குறைந்தது 7 கிலோமீட்டர் தூரம் என்னால் கடக்க முடியும். சென்னை சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கக் காத்திருந்தேன். ஆனால், முடியவில்லை ஆற்காடு வீராசாமியிடம் மனு அளித்துவிட்டுத் திருப்பினேன். இதற்காக எனக்கு ஒரு கோப்பையும் வழங்கப்பட்டது.

நான் சற்று பிரபலமான நபர் என்பதால் என்னை யாருக்கும் பிடிக்காது
சென்னைக்கு நடந்து செல்கிறேன் என்று கூறியதும் பலரும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். இந்த பகுதியில் உள்ளவர்களிடையே எனக்கு மரியாதை இல்லை. நான் சற்று பிரபலமான நபர் என்பதால் என்னை யாருக்கும் பிடிக்காது. என்னைப் பைத்தியம் என்பார்கள். சிலர் தெருக்களில் பைத்தியம் போன்று சுற்றித் திரிவதாக அவர்களுக்கு வெட்கக்கேடாக இருப்பதாகவும் திட்டுவார்கள். 100 கோடி ரூபாய் பணம் வைத்திருப்பவரைத் தேடி ஒரு பத்திரிக்கையாளர்கள் வருவதுண்டா? இல்லை! ஆனால் என்னைத் தேடி பலர் வருகின்றனர். இது பற்றி மக்களுக்குச் சிந்தனையில்லை.
நான் பொதுவாக இறைச்சிகள், மீன்கள் போன்றவை உண்பதில்லை. எனது உணவுகள் ஊறுகாய், நேற்றைய பழைய கஞ்சி போன்றவையே உண்ணுகிறேன். நான் பழைய கஞ்சிகள் குடித்தாலும், அது வெளியில் கூறினால் தானே தெரியும். எனக்கு உணவுகள் மீது அதிகம் ஆர்வம் இல்லை. துணிகளைத் துவைப்பது, குளிப்பது, ரேடியோக்களை துடைப்பது உறங்குவது போன்ற வேலைகள் மட்டும் தான் செய்வேன்.

நான் ரேடியோக்கள் வாங்கி வரும் நாட்களில், அதைச் சரி செய்து பாட்டுக் கேட்டுவிட்டே, அடுத்த வேலையைச் செய்வேன். அதுவரை உண்பது பற்றியோ, உறங்குவது பற்றியோ எண்ணம் இருக்காது.
எனக்கு வெளியில் உள்ளவர்கள் பணம் கொடுப்பர். முதலில் நான் வாங்குவதில்லை. எனக்கு நடப்பதற்கான கால் செருப்பு, துணிகள் போன்றவை வாங்க வேண்டியிருக்கும் அவை அனைத்தும் வாங்கப் பணம் தேவை என்பதால் மட்டும் யாரேனும் பணம் தந்தால் வாங்கிக் கொள்வேன்.” என்றார்.

நான் அவரிடம் நீங்கள் எப்போதும் வாகனத்தில் ஏறுவது இல்லையா என்று மீண்டும் ஒருமுறை கேட்டேன். அவர் “தற்போது எல்லோரும் மொபையில்களை கையிலேயே கொண்டு நடக்கின்றனர். நான் வண்டியில் தற்போது ஏறினால் உடனே புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிடுவர். அப்போது நான் வண்டியிலும் பயணிப்பேன் என்ற தகவல்கள் பரவி விடும். அது உங்களைப் போன்ற ஊடகங்களில் வெளியிடுவர்.” என்றார்.
எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்துக் கவலையில்லை
வாகனத்தைக் கண்டால் உங்களுக்கு ஏன் வெறுப்பு என்று நான் கேட்டேன், “நான் வண்டியில் சென்றால் நீங்கள் என்னைத் தேடி வருவீர்களா?. இதில் இருக்கும் பத்திரிகைகளில் எப்படி வரும். எனக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை நினைத்துக் கூட கவலையில்லை” என்றார்.

வாழ்க்கைத் துணை பற்றிய கேள்விக்கு, “எனக்கு 42 வயதிருக்கும் போது தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றியது. எனவே திருமணம் செய்ய முடிவெடுத்தேன். ஏற்கனவே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. திருமணத்திற்குப் பின் அவருடன் நான் வாகனத்தில் செல்வதில்லை. அந்நாட்களில் என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஒரு வருட காலம் என்னுடன் வாழ்ந்து வந்தார். அதன்பின் இருவரும் முடிவெடுத்துப் பிரிந்துவிட்டோம். அவருக்கு வேறு திருமணம் நடந்துவிட்டது. எனக்கு அதன்பின் திருமணம் செய்ய விருப்பமில்லை. பிள்ளைகள் இருந்தால், நான் சேகரித்து வைக்கும் ரேடியோக்களை பிடித்துத் தள்ளுவர். இங்கு யாரும் இல்லாததால் அந்த தொந்தரவு இல்லை.என்னுடன் பிறந்தவர்கள் 8 பேர் உள்ளனர். அவர்களிடம் நான் எதற்காகவும் செல்வதில்லை.” என்றார் நட ராஜா.
