ஆன்லைனில் குர்த்தி வாங்கி, ரூ. 80,400 ஏமாந்த இளம்பெண்! மக்களே உஷார்!
கேஷ் ஆன் டெலிவரி இல்லாததால், 800 ரூபாய்க்கு டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி உள்ளார். அதற்குப் பிறகுதான் வில்லங்கமே ஆரம்பித்தது.
ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான பொருட்களில் இருந்து அனைத்து விதமான ஆடம்பர பொருட்களும் கிடைக்கிறது. அடிக்கடி ஆஃபர் என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஆன்லைன் ஆப்கள் முயற்சி செய்வது உண்டு. அதுபோல் தான் போலி ஆப் ஒன்றில் ஆஃபரில் குர்த்தி ஒன்றை வாங்கிய பெண்ணிற்கு இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதிய ஆன்லைன் ஷாப்பிங் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் குர்த்திகளுக்கு(சுடிதார் டாப் போன்றது) அதிக ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த குர்த்தி ஒன்று, 800 ரூபாய்க்கு இருந்ததால் சற்றும் யோசிக்காமல் ஆர்டர் செய்துள்ளார். கேஷ் ஆன் டெலிவரி இல்லாததால், தனது டெபிட் கார்ட் மூலம் ஆர்டர் செய்த அவருக்கு வங்கிக்கணக்கில் இருந்து 800 ரூபாய் செலவழிந்ததற்கான மெசேஜ் வந்துள்ளது. ஆனால் அந்த ஆப்-ல் இருந்து ஆர்டர் பற்றிய செய்திகள் எதுவும் வராததால், அதில் இருந்த உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய நபர் ஒருவர் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் நம்பர் வரை பெற்றுள்ளார். அதன்பின் மொபைலில் வந்த ஓடிபி எண்ணையும் கேட்டு வாங்கியுள்ளார். ஒருசில நாட்களில் 800 ரூபாய் பணம் வங்கிக்கணக்கில் வந்துவிடும் எனக் கூறியுள்ளார். ஆனால், ஒருசில நிமிடங்களில் பெண்ணின் வங்கியில் இருந்த 79,600 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. மீண்டும் உதவி எண்ணிற்கு அழைத்தவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்கான ஆப்களை தரவிறக்கம் செய்யும்போது கவனம் தேவை. கூகுள் பிளே ஸ்டோரில் பிளே புராடக்ட் எனேபிள் செய்யப்பட்ட ஆப்களை மட்டுமே டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.