முகச் சுருக்கங்களை தடுக்க 40 ஆண்டுகளாகச் சிரித்ததேயில்லை! விநோதப் பெண்
திருமணத்தின் போது புகைப்படக் கலைஞர் சிரிக்கக் கூறியபோது, ‘இதுதான் நான், என்னால் சிரிக்கமுடியாது’ என மறுத்து விட்டாராம். தற்போது இவருக்கு 50 வயது ஆகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இவர் சிரித்ததேயில்லை.
உணர்ச்சிகள் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றே. கோபம், அகங்காரம், அழுகை ஆகியவற்றைக் கூட ஒருவர் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், சிரிப்பை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா?
நமக்கு மகிழ்ச்சியான தருணத்தில் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியமே. பல்வேறு ரியாலிடி ஷோக்களிலும் பார்த்திருப்போம், ஒருவர் நீண்ட நேரம் சிரிக்காமல் இருக்க வேண்டும் என டாஸ்க்குகள் கொடுப்பார்கள். சிரிப்பை அடக்குவது என்பது அத்தனை கடினமான ஒன்று. நான் எல்லாம், காமெடி என்னவென்றே தெரியாமல் பிறர் சிரிப்பதைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்த தருணங்கள் எல்லாம் உண்டு. அப்படியிருக்கையில், லண்டனைச் சேர்ந்த டெஸ் கிரிஸ்டின் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாகச் சிரித்ததே இல்லையாம். இவர் லண்டனில் உள்ள காய்கறி உற்பத்தியகத்தில் வேலை பார்க்கிறார்.
தனது பதின்ம வயதில் சிரிக்கும்போது கன்னத்தின் அருகே சுருக்கம் ஏற்படுவதைக் கவனித்துள்ளார். தனது முகத்தில் எந்த வித சுருக்கமும் வந்துவிடக் கூடாது என நினைத்த இவர் அன்றிலிருந்து சிரிப்பதையே நிறுத்திவிட்டார்.
படம் நன்றி: டெய்லி மெயில்
இதுதொடர்பாக டெய்லி மெயில் பத்திரிகைக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், 'ஆரம்பத்தில் சுருக்கம் வரக்கூடாது என்பதற்காக சிரிப்பைக் கட்டுப்படுத்தவில்லை. கத்தோலியப் பள்ளிகளில் குழந்தைகள் சிரிப்பதை அங்குள்ள கன்னிகாஸ்திரிகள் விரும்புவதில்லை. அப்போதுதான் முதலில் சிரிப்பைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தேன். பின்னர் சுருக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக சிரிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
h'cd நன்றி: டெய்லி மெயில்
இவர் தனது திருமணத்தின் போதும், தனக்குக் குழந்தை பிறந்த போதும் கூட சிரித்ததில்லையாம். திருமணத்தின் போது புகைப்படக் கலைஞர் சிரிக்கக் கூறியபோது, ‘இதுதான் நான், என்னால் சிரிக்க முடியாது’ என மறுத்துள்ளார். தற்போது இவருக்கு 50 வயது ஆகிறது. இவரது நண்பர்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் வந்தநிலையில், இவரது சருமம் சுருக்கமற்று இளைமையாக தோற்றமளிக்கிறது.
நன்றி: டெய்லி மெயில்
இவரது நண்பர்களுக்கோ, கணவருக்கோ இவர் சிரிக்காதது என்றுமே ஒரு குறையாக தெரிந்ததில்லை என்கிறார் டெஸ். இருந்தாலும் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதே நமது நம்பிக்கை. நம்மால் ஒருநாளாவது சிரிக்காமல் இருக்க முடியுமா என்றால் நிச்சயம் சந்தேகமே.